Home > News > முட்டாள் இளைஞர்களும் புத்திசாலி நடிகர்களும்.

முட்டாள் இளைஞர்களும் புத்திசாலி நடிகர்களும்.

November 28th, 2008

ரசிகர்கள் என்ற பெயரில் சுற்றி திரியும் முட்டாள் இளைஞர்களை, நடிகர்கள் அவர்களின் சுய லாபத்துக்காக எப்படியெல்லாம் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.


இனி வருவது குமுதம் ரேபோர்டேரில் வெளிவந்த விஜயின் உண்ணாவிரதம் பற்றிய செய்தி!

உண்ணா விரதத்தின் மூலம் பாவ மன்னிப்பு கெட்ட விஜய் - குமுதம் ரிப்போர்ட்டர்

ஈழப் பிரச்னை இன்று தமிழகத்தில் பரபரப்பாக பற்றியெரியும் நிலையில், தனியொரு நடிகராக விஜய் இந்தப் பிரச்னையில் களமிறங்கி, அவரது ரசிகர்கள் சகிதம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிறன்று முப்பத்தாறு இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதமிருந்தனர். இந்த உண்ணாவிரதங்களுக்கான ஏற்பாட்டைச் செய்தது, இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் விஜய் கலந்து கொண்டார். அதேநாளில், அதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்த இருந்த இந்து மக்கள் கட்சி, விஜய்க்காக அந்த இடத்தை விட்டுக் கொடுத்தது தனிக்கதை.

காலை எட்டு மணிக்கு போராட்டம் என அறிவித்திருந்தாலும், விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கே வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது. மேடை உள்பட மற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்ட எஸ்.ஏ.சி.யிடம் நாம் பேச்சுக் கொடுத்தோம். “இந்தப் போராட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. விஜயின் விருப்பத்தின் பேரில்தான் இது நடக்கிறது” என்றார் அவர். அதன்பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், புதுவைப் பகுதி ரசிகர்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. புஷி ஆனந்த், அந்த மாநில விஜய் ரசிகர் மன்றத் தலைவராம். அவரும் வந்திருந்தார்.

ரசிகர்கள் இருக்கைகளில் அமராமல் எழுந்து நின்று கத்திக்கொண்டே இருந்ததால், “நீங்கள் திரைப்பட விழாவுக்கு வரவில்லை. நம் சகோதரர்கள் வீட்டு சாவுக்கு வந்திருக்கிறீர்கள். இப்படி நடந்து கொள்ளக் கூடாது” என்று மைக்கில் எஸ்.ஏ.சி. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாராவது கேட்டால்தானே? நடிகர் மன்சூர் அலிகான் அவரது மகளுடன் வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். “நான் ஆவேசமாகப் பேச இந்த மேடை உகந்த இடம் இல்லை. மத்திய அரசு இலங்கைக்குச் செய்யும் ஆயுத உதவிகளை அங்குள்ள போராளிகளுக்குச் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை” என்று பேசினார் மன்சூர். (மன்சூர் தொடங்கி அதன்பின் ஒவ்வொருவரும் பேசும்போது எஸ்.ஏ.சி., அவர்கள் அருகிலேயே நின்று, `வில்லங்கமாக எதுவும் பேசி விடாதீர்கள்’ என்று கெஞ்சினார்).

காலை 10.20-க்கு விஜயின் தாயாரும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் வர, 10.25 மணிக்கு வந்து சேர்ந்தார் விஜய். அப்போது `நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்(!!)’ என்ற பாடல் ஒலிபெருக்கியில் அலறியது. `திருச்செந்தூரில் `வில்லு’ பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு விஜய் வந்திருப்பதாக’ எஸ்.ஏ.சி. மைக்கில் சொன்னார். விஜய் வந்தபின் பேசத் தொடங்கிய ஷோபா, “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் சோகமும் சந்தோஷமாக மாறும் காலம் வந்துவிட்டது” என்று முடித்துக் கொண்டார்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேச அரசியல் பிரமுகர்களோ, திரையுலகத்தினரோ வராததால் மேடை டல்லடித்தது. இதை ஈடுகட்டும் விதமாக `நீ எந்த ஊரு நான் எந்த ஊரு’, `அர்ஜுனன் வில்லு, அரிச்சந்திரன் சொல்லு’ போன்ற புகழ்பெற்ற விஜய் பாடல்கள் காதுகளைப் பதம் பார்த்தன. அந்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் எழுந்து நடனம் ஆடத் தொடங்க, உண்ணாவிரதப் பந்தலே குத்தாட்ட மேடையானது. அப்போது மேடைக்கு வந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், “சினிமா பாடல்களுக்கு நீங்கள் இப்படி நடனம் ஆடுவதை ஊடகங்கள் ஒளிபரப்பினால் என்ன ஆகும்? நடிகர்களுக்கும் சமூகப் பொறுப்புண்டு” என்று விழா ஏற்பாட்டாளர்கள் தலையில் குட்டு வைத்தார்.

இயக்குநர் வேலு. பிரபாகரன் பேசும்போது, “விஜய் பொறுப்புணர்வுடன் படங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும்” என்று அட்வைஸ் வழங்கினார். சுப.வீ. சென்ற பிறகு மீண்டும் விஜய் பாடல்கள் காதைக் கிழிக்கத் தொடங்கின. ரசிகர்களும் பழையபடி எழுந்து குத்தாட்டம் போட, போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கட்டுப்படுத்தினர். மதியம் 1.37 மணிக்கு விஜயின் மனைவி சங்கீதா வந்து சேர்ந்தார்.

இயக்குநர் வி.சி.குகநாதன் பேசும்போது, “இயக்குநர்கள் சீமானும், அமீரும் தனித்தனியாகச் சொன்னால் குற்றம்; விஜய் ரசிகர்கள் அனைவரும் இணைந்து சொன்னால் அதுதான் சட்டம். விஜய் கோட்டையைப் பிடிப்பது நிஜம்” என்று எதற்கோ அச்சாரம் போட்டுவிட்டுச் சென்றார். நடிகர் ஸ்ரீமன், “புத்தன் பிறந்த நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த புத்தனே விஜய் வடிவில் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்” என்று பேசி அசத்தினார்(!). இயக்குநர் பேரரசு, “இதே இடத்தில் (ரஜினி கலந்து கொண்ட) ஒகேனக்கல் பிரச்னைக்காகக் கூடிய கூட்டத்தைவிட அதிகமான கூட்டம் கூடிவிட்டது” என்று பஞ்ச் வைத்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு பழ.நெடுமாறன் உண்ணாவிரத மேடைக்கு வந்த போது, மேடையில் `வா.. வா..வா என் தலைவா, உன் ரசிகன் நான் அல்லவா?’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தார் நெடுமாறன். சற்று நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியனும் மேடையேறினார். அவர்கள் இருவரும் பேசிவிட்டுச் சென்றதும் பேசத் தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர், “தமிழகம் முழுவதும் இன்று 36 இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். `சேலத்தில் ஆயிரம் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியிருந்தோம். ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வந்துவிட்டார்கள்’ என்று சேலம் மாவட்டத் தலைவர் என்னிடம் பேசினார்” என அவர் சொன்னதும், மேடையில் இருந்தவர்கள் (விஜய் உள்பட) சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். உடனே சுதாரித்துக் கொண்ட எஸ்.ஏ.சி. “அந்தச் சாப்பாடு உண்ணாவிரதம் முடிந்ததும் வழங்குவதற்கு..” என்று கூறி சமாளித்தார்.

கடைசியில் பேசிய விஜய், “இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. திரையுலகத்தினரும், அரசியல் கட்சிகளும் எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டார்கள். எனது கோரிக்கையை ஏற்று எனது ரசிகர்கள், `இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்குத் தந்தி அனுப்பினார்கள். அந்த வாசகத்தை சிங்கள மொழியில் சொன்னாலாவது அவர்கள் காதில் விழுகிறதா பார்ப்போம்?” என்றவர், “ஸ்ரீலங்க ராஜ்ஜிய கருணாகர ஹிதயவதன; ஜெமில மரணக்கே நவதாண்டவோனே!” என்றவர், “நிச்சயம் அங்கு நடக்கும் போர் முடிவுக்கு வரும்” என்று முழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்பு நாம் விஜயிடம் தனியாகப் பேசியபோதும் மேடையில் பேசிய அதே கருத்தைத்தான் நம்மிடமும் சொன்னார் அவர்.

திரையுலகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, “தனது மகன் விஜயை சினிமாவில் முன்னிறுத்த அவரது தந்தை எஸ்.ஏ.சி. என்னவெல்லாம் செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அடுத்தகட்டமாக விஜயை இப்போது அரசியலுக்கும் அவர் தயார் செய்து கொண்டிருக்கிறார். முதலில் மன்றக் கொடி வெளியிட்டார்கள். இப்போது உண்ணாவிரதம். இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக நயன்தாரா கூட ஐந்து லட்ச ரூபாய் கொடுக்க, விஜய் கொடுத்தது வெறும் ஒரு லட்சம்தான். அதனால் ஏற்பட்ட சலசலப்பைச் சரி செய்யவே இந்த உண்ணாவிரத ஏற்பாடு. அதாவது இந்த உண்ணாவிரதத்தின் மூலம் அனைவரிடமும் பாவ மன்னிப்புக் கேட்டிருக்கிறார். மற்றபடி ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதம் நடத்துகிறோம் என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை” என்றனர் அவர்கள்.

இவ்வாறாக முடிகிறது அந்த செய்தி.

நம் இளைஞர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள் இதை பார்த்தால் அவர்களுக்கே நம் தேசம் மீதும் மக்கள் மீதும் உள்ள நம்பிக்கை போய் விடும்.

இது போன்ற ஒரு நடிகனின் பின்னால் பொய், கெட்டு சீரழிந்து, தன் குடும்பத்தை சீரழித்து, நம் நாட்டையே நாசமாக்கும் இவ்வாறான இளைஞர்களை என்ன செய்ய முடியும்? அல்லது இந்த நடிகர்களை தான் என்ன செய்ய முடியும்? இதையெல்லாம் நினைத்தால் வெக்க கேடாக இல்லை?

நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்.

News

Comments (0) Trackbacks (0) Leave a comment Trackback
  1. No comments yet.
  1. No trackbacks yet.